(வெருளி நோய்கள் 436-440 : தொடர்ச்சி)

உருள்வளிக் கோள்(Uranus) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உருள்வளிக் கோள் வெருளி.
ஆரிய மூடத்தனங்களுக்கு முன்னோடிக் கிரக்க உரோமானிய மூடத்தனங்கள் ஆகும். இயற்கைக் கோளான உரேனசை சனியின் தந்தை என்றும் வியாழனின் தாத்தா என்றும் கருதினர். இவரின் மனைவி பூமிக்கடவுளான கையா. இருவருக்கும் நூறு கைகள் கொண்ட நூற்றொரு கையர்(Hecatoncheires/எகாடோஞ்சிர்கள்), ஒற்றைக் கண் கொண்ட ஒற்றைக் கண்ணன், பேருருவன் என்னும் அரக்கர்கள் போன்ற வலிமை மிகுந்த பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுக்கு அஞ்சி இவர்களையே பாதாளச்சிறையில் உரேனசு அடைத்ததால் உரேனசு குறித்து அஞ்சினர்.
சப்பானியச் சொல்லான தென்னின் என்பதன் பொருள் விண்ணுலக ஆள் அல்லது விணணுலகத்தில் இருப்பது. தென் என்றால் துறக்கம்(சொர்க்கம்) என்றும் நின் என்றால் ஆள் என்றும் பொருள். தென் என்பதை ஆங்கிலத்தில் டென்/ten எனக் குறிப்பதால் ஆங்கிலச் சொல்லாகக் கருதி பத்து எனச் சில தளங்களில் குறிக்கப்பட்டிருப்பது தவறாகும். விண்ணில் இருப்பது என்பதன் நேர் பொருளாக உரேனசு என்பதை விண்மக்கோள் என்பர். அது பொதுச்சொல்லாகும். உரோமக் கிரேக்கக் கடவுளான உரேனசின் பொருள் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் விண் என்பதாகும். இக்கோள் படுத்துக்கொண்டே உருண்டு இயங்குவது, வளி நிறைந்தது. எனவே உருள்வளிக்கோள் எனக் குறித்துள்ளேன்.
புத்த அண்டவியலில், சமற்கிருதச் சொல்லான தேவா (देव) என்னும் மூல வேர்ச்சொல்லில் இருந்து சீன மொழியில் தியான்ரென் (天人) என மொழிபெயர்க்கப்பட்டுப், பின்னர் சப்பானிய மொழியில் டென்னின் என மாற்றப்பட்டது எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெய்வம் என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து உருவானதே (தெய்வ>தேவ>) தேவா என்னும் சமற்கிருதச் சொல்லாகும்.
00

பேசுவது – உரையாற்றுவது -தொடர்பான தேவையற்ற பேரச்சம் உரை வெருளி.
சிலருக்குப் பெரிய கூட்டத்தில் பேசினாலும் அல்லது சிறிய கூட்டத்தில் பேசினாலும் அச்சம் வரும். திறந்த வெளியில் பேசும் பொழுது சிலருக்கும் மூடிய அறையில் பேசும்பொழுது சிலருக்கும் அச்சம் வரும். இலக்கியக் கூட்ட அல்லது பொதுக்கூட்டச் சொற்பொழிவை-உரையாற்றுவதைக் குறிப்பதால் இதை உரை வெருளி எனவும் பொதுவான பேச்சு வெறுப்பைப் பேச்சு வெருளி என்றும் வேறுபடுத்தலாம்.
சொல்லாடல் வெருளி(Laliophobia/ lalophobia), பேச்சு வெருளி(sermophobia) காண்க.
glōssa, என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நாக்கு. நாக்கிலிருந்து பிறக்கும் பேச்சை இது குறிக்கிறது.
00

பிறருடன் உரையாட அல்லது பேசக் காரணமற்றப் பேரச்சம் கொள்வது உரையாடல் வெருளி
பிறரைச் சந்திக்கும் பொழுது வணக்கம், நலமா?, எப்படி இருக்கிறீர்கள்?, எந்த ஊர்?, எப்பொழுது வந்தீர்கள்?, என்பனபோன்ற அடிப்படைஉரையாடல் மேற்கொள்வதற்குக்கூட வெட்கமுற்று அச்சம் கொள்வோர் உள்ளனர்.
சிலரைப் பார்த்தாலே, பேசியே அறுத்து விடுவார், கத்தி போடுவார், இரம்பம் வந்துவிட்டதே என்று அவர்களின் பேச்சுபற்றிய பயம் வருவதுண்டு. பேசியதையே திரும்பத் திரும்பப் பேசியும் தேவையில்லாதவற்றைப் பேசியும் பயனிலப் பேசியும், புறங்கூறிப் பேசியும் இன்னா சொல் கூறியும் வெறுப்பை விளைவிப்பவர்கள் உள்ளனர்.
பேச்சு வெருளி என்றால் கூட்டத்தில் பேசுவது எனத் தவறாகப்பொருள் கொள்ளலாம்.
ஓட்டுநர் பேச்சு வெருளி(umersermophobia)யும் இதுவும் ஒன்றல்ல. உரை வெருளி(Glossophobia) காண்க.
sermo என்னும் இலத்தீன் சொல்லிற்கு உரையாடல் என்று பொருள்.
00

உலகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உலக வெருளி.
மூட நம்பிக்கைகளாலும் தவறான மத நம்பிக்கைகளாலும் சில நேரங்களில் அறிவியல் செய்திகளின் தவறான புரிதல்களாலும் உலகத்தில் நடக்கும் அவலங்களாலும் நில நடுக்கம், பெரு மழை, பெரு வெள்ளம், கடல் கோள், எரிமலை முதலிவற்றால் ஏற்படும் இயற்கைப் பேரிடரகளாலும் பெரிதும் அச்சம் கொள்கின்றனர்.
அவநம்பிக்கை நோக்கில் வாழ்பவர்களுக்கும் உலகம் மீது பேரச்சம் வருவது இயற்கையே.
00

உலகமயமாதல் தொடர்பான தேவையற்ற வெறுப்பும் அளவு கடந்த பேரச்சமும் கொள்வது உலகமய வெருளி.

உலகமயமாதலினால் உள்ளூரில் உலகப்பொருள்களும் உள்ளூர்ப்பொருள்கள் உலக நிலையிலும் பரவலாகக் கிடைக்கின்றன. உலகமயமாதலால் நன்மைகள் இருப்பினும் இதனால் ஏற்படும் தீமைகள் குறித்து இதனை வெறுப்போரும் இது கண்டு அஞ்சுவோரும் உள்ளனர்.

வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை நலிவடையச் செய்யும், வளரா நாடுகளில் வேலையிழப்பு பெருகும், உள்ளூர் வணிகம் அழிந்து வணிகர்களும் அவர்களைச் சார்ந்த மக்களும் வாழ்விழப்பர், நாகரிகம், பண்பாடு, மொழி கலப்புற்று அவற்றின் அழிவிற்கு வழி வகுக்கும், பிற நாட்டு மதங்கள் பரப்பப்பட்டு உள்ளூர் மதங்கள் மறைந்து போகும் என்பன போன்ற பேரச்சம் கொண்டு உலகமயமக்களை விரும்பாதவர்கள் இத்தகையர்.

வளிப்பை (பலூன்) வெருளியையும் Globophobia என்றே குறிக்கின்றனர். அதனை Balloon phobia என வேறுபடுத்திக் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

00

(தொடரும்)