(வெருளி நோய்கள் 416-420 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 421-425
- உதைபந்தாட்ட வெருளி -Soccerphobia
உதைபந்தாட்டம்(soccer) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உதைபந்தாட்ட வெருளி.
இதனைக் காற்பந்து வெருளி(footballphobia) என்றும் சொல்வர்.
ஆடுபவர்களில் சிலருக்கு அல்லது வேடிக்கை பார்ப்பவர்களில் ஒரு சாராருக்குப் பந்து தங்கள் மீது பட்டுக்காயம் ஏற்படலாம் என்ற பேரச்சம் வரலாம். இதனால் ஆட்டத்தின் மீதே வெருளி வரும்.
00
- உந்து ஒலிப்பான் வெருளி – Autokeraphobia
உந்து ஒலிப்பான்(horn) குறித்த வரம்பற்ற பேரச்சம் உந்து ஒலிப்பான் வெருளி.
Keras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கொம்பு. கொம்பு என்பது பின்னர் ஊது கொம்பையும் இசைக் கொம்பையும் குறித்தது. ஊர்திகள் பந்த பின்னர் அவற்றில் எச்சரிக்கை தெரிவிப்பதற்காக உள்ள ஒலிப்பானையும் பின்னர்க் குறிக்கலாயிற்று.
இரைச்சல் வெருளி உள்ளவர்களுக்கு ஒலிப்பான் எழுப்பும் ஒலி வெறுப்பை ஏற்படுத்தி வெருளிக்கு உள்ளாவர்.
00
- உந்து கழுவல் வெருளி – Autoplenophobia
உந்து கழுவல் குறித்த வரம்பற்ற பேரச்சம் உந்து கழுவல் வெருளி.
உந்துவை முழுமையாகக் கழுவும் பொழுது சக்கரங்களில் சிக்கியுள்ள அழுக்குகள், சகதிகள், சேறுகள் முதலியனவும் கழுவப்பட்டு மேலே தெறிக்கும் என்று அஞ்சுவோர் உள்ளனர். உந்து கழுவும் பொழுது பகத்தறிவிற்குப்பொருந்தாக பேரச்சம் சிலருக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Auto என்றால் தான், தன்னால் எனப் பொருள்கள். எனவே, தன்னால் இயங்கும் ஊர்தி என்பதன் சுருக்கமாக எண்ணுகின்றனர. எனவே, Automobile என்பதன் சுருக்கமாக இங்கே Autoஎனப்படுகிறது. தானாக இயங்கும் ஊர்தி, தானூர்தி, தானி என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் தன்னால் இயங்கும் ஊர்தி அல்ல. இயந்திரத்தால் இயங்கும் ஊர்திதான்.
pleno என்னும் போர்த்துகீசியச் சொல்லின் பொருள் முழு. எனினும் இங்கே ஊர்தியை முழுமையாகக் கழுவுதல் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது.
00
- உந்து-படகு வெருளி – Cuimuphobia
உந்து-படகு(car boat) குறித்த அளவு கடந்த பேரச்சம் உந்து-படகு வெருளி.
நிலத்தில் பயணம் செய்யும் பொழுது நீர்ப்பயணத்தையும் நீரில் பயணிக்கும்போது சாலைப்பயணத்தையும் எண்ணிக் குழம்பிப் பகுத்தறிவிற்குப் பொருந்தாத காரணங்களை எண்ணி அஞ்சுவதே உந்து படகு வெருளி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Cuimu என்றால் உந்து படகு.
இயந்திரப் படகு என்பது இயந்திரத்தால் இயக்கப்படும் படகு. உந்து படகு என்பது உந்துபோல் இயந்திர அமைப்பு, தோற்றம் கொண்ட படகு. நிலத்தில் உந்து போன்றும் நீரில் படகு ஆகவும் இயங்கும் ஊர்தி எனலாம்.
00
- உப்பு வெருளி – Alatiphobia / Halophobia
உப்பு(salt) உப்பு உணவுகள் மீதான வரம்பற்ற பேரச்சம் உப்பு வெருளி.
உப்பு வாழ்க்கைக்குத் தேவையான ஒரு கனிமம் ஆகும். “உப்பில்லாப்பண்டம் குப்பையிலே” என்பதிலிருந்து அதன் நன்மையைப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் நேரடியாவோ உணவில் சேர்த்தோ உட்கொள்ளும் உப்பு நமக்குத் தீமைகளை விளைவிக்கிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமன், எலும்பு மெலிதல், உடலுறுப்பு வீக்கம் முதலியவற்றுக்குக் காரணமாக மிகுதியான உப்பு அமைந்து விடுகிறது. இதனால் கட்டுப்பாடாக இருக்க வேண்டியவர்கள் அளவுக்கு மீறிய பேரச்சம் கொள்கின்றனர்.
உப்பு குறைந்தாலும் கூடினாலும் தீமையே. எனவே, நோய்வாய்ப்படும்பொழுதோ நோய் வரும் சூழலிலோ மருத்துவர்கள் அறிவுரையைப் பின்பற்ற வேண்டுமேயன்றி வெருளிக்கு ஆளாகக் கூடாது.
hals என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உப்பு எனப் பொருள்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment